இயேசுவின் திரு இதயத்திற்கு மனுக்குலத்தை அர்ப்பணிக்கும் செபம் (Consecration to the Sacred Heart of Jesus)

மிகவும் மதுரமான இயேசுவே, மனித இனத்தின் மீட்பரே, உமது பீடத்தின் முன் தாழ்ந்து விழுந்து கிடக்கும் எங்கள் மீது உமது திருக்கண்களைத் திருப்பியருளும்.
நாங்கள் உம்முடையவர்கள், உம்முடையவர்களாகவே இருக்க விரும்புகிறோம். உம்மோடு இன்னும் நெருக்கமாக இணைந்திருக்கும் பொருட்டு, எங்கள் ஒவ்வொருவரையும் உமது திரு இதயத்திற்கு இன்று முழுமையாக அர்ப்பணிக்கின்றோம். உம்மை ஒருபோதும் அறியாதவர்கள் பலர்; உம்முடைய கட்டளைகளைப் புறக்கணித்து உம்மை ஏற்க மறுப்பவர்களும் பலர்.
மிகவும் இரக்கமுள்ள இயேசுவே, அவர்கள் அனைவர் மீதும் இரக்கம் காட்டி, அவர்களை உமது திரு இதயத்திற்கு இழுத்துக் கொள்ளும். ஆண்டவரே, உம்மை ஒருபோதும் விட்டுப் பிரியாத விசுவாசிகளுக்கு மட்டுமன்றி, உம்மை விட்டு விலகிச் சென்ற ஊதாரிப் பிள்ளைகளுக்கும் நீரே அரசராக இருத்தருளும். அவர்கள் வறுமையிலும் பசியிலும் அழியாதபடி, விரைவில் தம் தந்தையின் இல்லத்திற்குத் திரும்பி வரச் செய்தருளும். தவறான கருத்துக்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கும், பிரிவினையால் விலகியிருப்பவர்களுக்கும் நீரே அரசராக இருந்து, அவர்களைச் சத்தியத்தின் துறைமுகத்திற்கும் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் திரும்ப அழைத்தருளும்.
இவ்வாறு விரைவில் ஒரே மந்தையும் ஒரே ஆயனும் ஏற்படச் செய்தருளும். இன்னும் இருளில் இருப்பவர்களையும் உமது அரசின் ஒளியில் சேர்த்தருளும். இறுதியாக, உமது திருச்சபைக்கு முழு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அளித்தருளும். அனைத்து நாடுகளுக்கும் அமைதியையும் ஒழுங்கையும் தந்து, உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை "எங்கள் மீட்பைப் பெற்றுத்தந்த தெய்வீக இதயத்திற்கு என்றென்றும் புகழும் மாட்சியும் உண்டாவதாக" என்ற ஒரே குரல் ஒலிக்கச் செய்தருளும்.
ஆமென்.