இறைவனைப் புகழும் பாடல்கள்



நீர் தூய ஆண்டவராகிய கடவுள், வியக்கத்தக்கவை செய்பவர் நீரே.
நீர் வல்லவர். நீர் மாண்புமிக்கவர். நீர் உன்னதமானவர்.
நீர் எல்லாம் வல்ல அரசர். தூய தந்தையே,
விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் அரசரே.

நீர் ஒருவரே மூவொரு கடவுள், கடவுள்களுக்கெல்லாம் ஆண்டவர்.
நீர் நன்மை சொரூபி, அனைத்து நன்மையும் ஆனவர், உயரிய நன்மையும் நீரே.
வாழும் உண்மையான ஆண்டவராகிய கடவுள் நீரே.

நீர் அன்பு, நீர் பிறன்பு; நீர் ஞானம், நீர் தாழ்ச்சி,
நீர் பொறுமை. நீர் அழகு, நீர் கனிவு,
நீர் பாதுகாப்பு, நீர் இளைப்பாற்றி,
நீர் களிப்பும் மகிழ்ச்சியும், நீர் எங்கள் நம்பிக்கை,
நீர் நீதி,
நீர் நிதானம், எங்களுக்குப் போதுமான செல்வமெல்லாம் நீரே.

நீர் அழகு, நீர் கனிவு,
நீர் பாதுகாவலர், நீர் எங்களைக் காப்பவர்,
நீர் எங்களுக்கு அரண்,
நீர் வலிமை, நீர் புத்துயிர், நீர் எங்கள் நம்பிக்கை,
நீர் எங்கள் விசுவாசம், நீர் எங்கள் அன்பு,
நீர் எங்கள் இனிமை எல்லாம், நீர் எங்கள் நிலைவாழ்வு:
மாண்புமிக்க வியக்கத்தக்க ஆண்டவரே, எல்லாம் வல்ல இறைவா,
இரக்கமுள்ள மீட்பரே.