குடும்பங்களுக்காக அன்னை தெரசா செபித்த செபம்

விண்ணகத் தந்தையே,
நாசரேத்துத் திருக்குடும்பத்தை எங்களுக்கு ஒரு வாழ்வின் முன்மாதிரியாகத் தந்துள்ளீர். அன்புத் தந்தையே, அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைந்த மற்றொரு நாசரேத்தாக எங்கள் குடும்பம் மாற எங்களுக்கு உதவியருளும். எங்கள் குடும்பம் ஆழ்ந்த தியானம் நிறைந்ததாகவும், நற்கருணை பக்தியில் ஊறியதாகவும், மகிழ்ச்சியால் மலர்வதாகவும் இருக்கச் செய்தருளும்.
மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் குடும்ப செபத்தின் வழியாக நாங்கள் என்றும் இணைந்து இருக்க எங்களுக்கு உதவியருளும். எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம், குறிப்பாக அவர்கள் வேதனையான உருவில் (துன்பத்தில்) இருக்கும்போது, அவர்களில் இயேசுவைக் காண எங்களுக்குக் கற்றுத் தாரும். இயேசுவின் நற்கருணை இதயம் எங்களுடைய இதயங்களை அவருடைய இதயத்தைப் போலத் தாழ்ச்சியுள்ளதாக்கச் செய்து, எங்கள் குடும்பக் கடமைகளைப் புனிதமான முறையில் நிறைவேற்ற எங்களுக்கு உதவியருளும்.
கடவுள் எம் ஒவ்வொருவரையும் நேசிப்பது போல, நாங்களும் ஒருவரை ஒருவர் நாளுக்கு நாள் அதிகமாக நேசிக்கவும், நீர் எங்கள் பாவங்களை மன்னிப்பது போல நாங்கள் ஒருவருடைய குற்றங்களை ஒருவர் மன்னிக்கவும் செய்தருளும். அன்புத் தந்தையே, நீர் எதைத் தந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும், நீர் எதை எடுத்துக் கொண்டாலும் அதை ஒரு பெரும் புன்னகையோடு உமக்குக் கொடுக்கவும் எங்களுக்கு உதவியருளும்.
மரியாவின் மாசற்ற இதயமே, எங்கள் மகிழ்ச்சியின் காரணமே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யோசேப்பே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனிதக் காவல் தூதர்களே,
எப்போதும் எங்களுடன் இருந்து, எங்களை வழிநடத்திப் பாதுகாத்தருளுங்கள்.
ஆமென்.